பொதிகைச் சோலை என்பது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியலை அமைத்துக் கொள்ளும் ஓர் இயற்கை நேய வாழ்க்கை முறை. இயற்கையோடு இயைந்த இம்முயற்சி பழமையை நோக்கிக் செல்லும் மரபுவாதம் அல்ல. கல்வி, மருத்துவம், படைப்பாற்றல் முதலிய அனைத்து வாழ்வியல் துறைகளிலும் உலகலாவிய நவீனத் திறன்களை ஏற்றுச் செயல்படுத்துவது ஆகும். ஆனால் அந்த நவீனங்கள் யாவும் இயற்கைநேயமாக இருப்பதை உறுதி செய்துகொண்டு நடைமுறைப்படுத்துவதும் ஆகும். அதாவது பசுமைப் பொருளியல், சமத்துவ சமூகம், நீதியான ஆளுமை, அறவியல் பண்பாடு ஆகிய நற்பண்புகளைக் கொண்ட அமைப்பாக இருக்கும்.
பல்லுயிர் ஓம்புதல், பகுத்து உண்ணுதல் என்ற தமிழ்த் திணைச் சிந்தனை அடிப்படையில் தற்சார்பையும், உயிர்ம நேயத்தையும் கொண்டிலங்கும் சமூகமே உலகில் நீடித்து இருக்கும் என்பதே எமது அமைப்பின் மெய்யியல் ஆகும்.
உலகம் முழுமையும் நகரங்கள் பெருகியும் ஊரகங்கள் சுருங்கியும் வருகின்றன. தமிழ்நாட்டிலும் அதே நிலைதான். நகரங்கள் பொருளியல் வகையில் அதிக நிதிகளைக் குவித்து வைத்துள்ளன. ஊர்ப்புறங்கள் வாழ்விழந்து கிடக்கின்றன. பெரும் வேகமாக நகரங்கள் பெருத்துவருவதால் வாழ்வியல் வகையில் அவை வாழத் தகுதியற்றவையாக மாறி வருகின்றன. ஒரு சில பகுதிகள் அனைத்து இன்பங்களையும் எடுத்துக் கொண்டாலும் நகர்ப்புற பெரும்பாலான மக்கள் குடிநீர் பற்றாக்குறை, இருப்பிடப் பற்றாக்குறை, சாக்கடைகள், கொசுக்கள் என்று அன்றாடம் அல்லலில்தான் வாழ்கின்றனர். நகரங்களில் நீரும் காற்றும் முற்றிலும் மாசுபட்டுவிட்டது. வசதி படைத்தவர்கள் கூட வாழ்வது மிகக் கடினமாகறது. மின்சாரம் இன்றி, குளிரூட்டி வசதி இன்றி வாழ இயலாத நிலை. அதற்கு நிலக்கரியையும், பெட்ரோலையும், மணலையும், மலையும் சுரண்டி அழிக்க வேண்டியுள்ளது. ஆனால் இயற்கையை அவ்வளவு கொடுமையாகச் சுரண்ட முடியாது, அது திருப்பித் தாக்குகிறது. அதற்குச் சான்றாகவே அண்மையில் நடந்த புயல்கள், வறட்சி, பெருவெள்ளம், இன்னும் கொடிய தொற்றான கொரானா என்று நமக்கு எச்சரிக்கைகள் வந்து கொண்டே இருக்கிறன. பெருகும் எந்திர கண்டுபிடிப்புகள் நகரத்திலும் வேலை வாய்ப்பைச் சுருக்கி வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க கிராமங்கள் எனப்படும் ஊர்ப்புறங்களோ இன்று சாவின் விளிம்பில் உள்ளன. வேளாண்மை அழிக்கப்பட்டுவிட்டதால் வேலை வாய்ப்பும் அழிக்கப்பட்டுவிட்டது. நகரத்தை அண்டிப் பிழைக்கும் நிலைமைக்கு ஊரக மக்கள் மாறியுள்ளனர். பகல் நேர ஊர்ப்புறங்களில் முதியவர்களையும், நோயாளிகளை மட்டுமே நம்மால் காண முடியும். சுறுசுறுப்புடன் இயங்கி வந்த சென்ற நூற்றாண்டு ஊர்கள் இன்று மயானம்போல் காட்சியளிக்கின்றன.
அதுமட்டுமல்ல கிராமங்கள், சாதிச் சண்டைகளும், அரசியல் கட்சிச் சண்டைகளும் நிறைந்து வாழத் தகுதியற்றதாக மாறி வருகின்றன. ஊரக வாழ்வாதாரங்களான இயற்கை வளங்கள் நகரத்து மக்களாலும், பன்னாட்டு வணிகப்பூதர்களாலும் சுரண்டப்படுகின்றன. இதனால் நீர் வளமும், நிலவளமும், கடல்வளமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
ஆக நகரங்கள் ஒருபுறமும், ஊரகங்கள் மறுபுறமும் நரகங்களாக மாறி வருகின்றன, எல்லாரிடமும் எதிர்காலம் பற்றிய பதற்றமும், நம்பிக்கையின்மையும், அச்சமும் மேலோங்கி வருகிறது.
இதற்கு மாற்றாக அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை உருவாக்கவும், நமது தலைமுறைகள் அந்த வாழ்க்கையை வழங்குவதற்கான முயற்சிதான் இந்தப் பொதிகைச் சோலை வாழ்வூர்கள்.
பிறக்கும்போதே மருத்துவமனையில் இடம் பிடிக்கப் போட்டி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் போட்டி, பிள்ளைகள் பள்ளிகளில் படிக்கும் பாடங்களும் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி என்று போட்டியிலேயே பிள்ளைகள்.
பெரியவர்கள் ஆனதும் தேர்வில் போட்டி, வேலைக்குப் போட்டி என்று மக்கள் அனைவரையும், ஏன் மரத்தையும் கல்லையும், மண்ணையும் போட்டியாளர்களாக மாற்றிய பெருமை நமக்கு உண்டு.
இதற்கு மாற்றாக கூட்டுறவு, பகிர்வு, நேயம் இவற்றை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை,
விரும்பிய படிப்பைப் படிக்க, விரும்பிய வேலையைச் செய்ய ஒரு வாய்ப்பு, பதற்றம் இல்லாமல், அச்சம் இல்லாமல் வாழும் ஒரு சூழல் என்ற கனவை நனவாக்கும் முயற்சியே பொதிகைச் சோலை. எளிய வாழ்க்கை, இனிய வாழ்க்கை நமது இலக்கு.