பொதிகைச் சோலை எனப்படும் வாழ்வியல் ஊர் ஒரு இலட்சிய வாழ்விடமாக, அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக உருவாக வேண்டும் என்பதே கனவு.
வாழ்வின் அறமாக (Ethical principle) பகுத்துண்ணலும், பல்லுயிர் ஓம்பலும், (Share and Care) இருக்கும். இயற்கையை எதிர்ப்பதற்கு மாற்றாக தமிழ் அறம் வகுத்த திணை வாழ்வியல் அடிப்படையான இயற்கையுடன் இணைந்து வாழ்தல், உயிர்மநேயம் காத்தல் ஆகியவை அன்பையும், நிறைவையும் கொண்ட வாழ்வை எதிர்காலத் தலைமுறைகளுக்கு உருவாக்கித் தரும்.
நீர், நிலம், காற்று முதலியன ஐம்புதங்களை நேசித்தல், அவற்றை மாசுபடுத்தால் இருத்தல்.
மனிதர்களைத் தாண்டி அனைத்து உயிர்களிடமும் அருளுடன் இருத்தல்.
உண்மையாக இருத்தல். உடன் வாழும் அன்பர்களுடன் நாம் வாழும் பொதிகை ஊர் வளாகத்தில் உண்மை பேசுதல்.
அன்பு செலுத்தல். பொதிகை ஊர் வளாகத்தில் அனைவரிடமும் அன்பாக இருத்தல் வேண்டும். நண்பர்களிடம் காட்டும் கண்டிப்பும் அன்பிற்கானதாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவி அல்லாத ஆடவரும் பெண்களும் சகோதர சகோதரிகளாகவும், தாயாகவும் மதிக்கப்பட வேண்டும்.
பிறர் பொருளை பறிக்க நினைக்காதிருத்தல். பொதிகை வளாகம் பொதுவானதாக இருந்தபோதும், சிற்சில தனி உடமைகள் எல்லாருக்கும் இருக்கும். அவற்றை அபகரிக்கும் எந்தச் செயலும் எண்ணமும் இருக்கல் ஆகாது.
பொதிகை வளாகத்தில் ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமல்லாது பொருளையும் பகிர்ந்து கொள்ளுதலும், ஒருவருக்கு ஒருவர் உதவுதலும், அனைவரையும் சமமாக நடத்துதலும் வேண்டும்.
பொதிகை வளாகத்தில் உடல் உழைப்பு போற்றப்படும். அனைவரும் ஒரு நாளைக்குச் சிறிது நேரமாவது உடலுழைப்பை பொதிகைக் குழுமத்திற்கு வழங்க வேண்டும்.
பொதிகை வளாகத்தில் மது போன்ற போதைப் பொருட்கள் அருந்துதல் முற்றிலும் தடை செய்யப்படும்.
ஒருவரின் உணவுப் பழக்கத்தை மற்றவர்மேல் திணிக்கக் கூடாது. பொதுவாக புலால் தவிர்த்தல் விரும்பப்படும்.
பொதிகை வளாகத்தில் புகைப்பிடித்தல் முற்றிலும் தடை செய்யப்படும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடி பொதிகை வளாகத்தில் சாதி, மத, பாலின சமத்துவமும் சகோதரத்துவமும் பேணப்படும்.