பாமயன்

பாமயன் எனப்படும் மு.பாலசுப்பிரமணியன் சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். காரல்மார்க்சு, காந்தியடிகள், குமரப்பா ஆகியோரது கருத்துகளால் உந்தப்பட்டு தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர். கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து கிராமப்புற மேம்பாடு குறித்தும், பசுமைப் பொருளாதாரம் குறித்தும் பேசியும், எழுதியும், செயல்பட்டும் வருபவர். தினமணி, தமிழ் இந்து, சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்யம், ஜனசக்தி போன்ற பல்வேறு இதழ்களில் இவரது கட்டுரைகள் 500 மேற்பட்டு வெளிவந்துள்ளன. நெடுஞ்செழியன் அவர்களுடன் இணைந்து பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பில் பணியாற்றியவர். தமிழகத்தின் முதல் சூழலியல் நூல்களை வெளியிட்டவர்கள் இந்த அமைப்பினரே. குறிப்பாக ஒற்றை வைக்கோல் புரட்சி, மௌன வசந்தம், பசுமைப் புரட்சியின் வன்முறை, உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை போன்ற முன்னோடி நூல்கள் அப்போது வெளிவந்தவையே.

தமிழ் ஒப்புரவு என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் தாளாண்மை என்ற வேளாண்மை இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை, வேளாண் இறையாண்மை, அள்ளித்தரும் நிலம், பழந்ததமிழர் வேளாண்மை முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல், பொருளாதாரம் குறித்த இவர் எழுதியுள்ளார்.

நிதிகளின் உலகமயமாக்கம், மணற்கோட்டைகள் முதலிய பல நூல்களை மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

இவரும் இவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம் என்ற அமைப்பு இதுவரை பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இயற்கை வேளாண்மைப் பயிற்சிகளை அளித்துள்ளது. தமிழகத்தில் முதன்முதலாக இயற்கை வழி வேளாண்மைக்கு என்று பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதை பெரும்பான்மை உழவர்களிடம் கொண்டு சென்றவர்கள் இந்த அமைப்பினர். பல இயற்கை வேளாண்மை நுட்பங்களைக் கண்டறிந்து மக்களிடம் பரப்பியவர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது, ஒரிசா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும், இலங்கை, மலேசியா, வடஅமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள உழவர்களுக்கும் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளை அளித்துள்ளார்.

பல மாநிலங்களில் இயற்கை வேளாண்மை குறித்த மாதிரிப் பண்ணைகளை உருவாக் கியுள்ளார்.

தமிழகத்தில் முதன்முதலாக சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்பை உருவாக்கியர்களின் ஒருவர். குறிப்பாக தீண்டப்படாத தானியமாக இருந்ததை பல்வேறு கூட்டங்கள், உணவுத் திருவிழாக்கள் மூலம் பரப்பியவர். இன்று சிறுதானியங்கள் என்றால் பலருக்கும் தெரியவதற்குக் காரணமானவர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணம் செய்து ஊர்திப்பயணம், முதல் ஆயிரக்கணக்கான தெருமுனைக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள் என்று இயற்கை வேளாண்மை குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

'அடிசில் சோலை' என்ற ஒரு மாதிரிப் பயிற்சிப் பண்ணையையும் நடத்தி வருகிறார். இங்கு மாதந்தோறும் பயிற்சிகள், ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

அடிசில் அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் இயற்கைவழிக் காய்கறிகள் உற்பத்தி, சந்தைப்படுத்தல் ஆகியவற்றைச் செய்து வருகிறார். இதன் மூலம் திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்ட உழவர்கள் பயன்பெறுகின்றனர்.

சிறுதானியப்பதப்படுத்துத் சிறுதொழிற்சாலை ஒன்றை நிறுவி அதன் மூலம் உற்பத்தியும் செய்கிறார், அது பற்றிய பயிற்சியும் அளிக்கிறார்.

துகில் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி இயற்கைப் பருத்தி, கைத்தறி முறையில் ஆடைகளைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருவதோடு பருத்தி ஆடைகள், இயற்கைச் சாயம் போன்றவற்றில் பயிற்சியும் அளிக்கிறார்.

பனுவல்சோலை என்ற அமைப்பை உருவாக்கி இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல் குறித்த நூல்களை வெளியிட்டு வருகிறார்.

பொதிகைச் சோலை என்ற அமைப்பை உருவாக்கி நூற்றி பத்து ஏக்கர் பரப்பில் நூற்றி மூன்று பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து கூட்டாக தமிழத்திலேயே முன்மாதிரியாக ஒரு திணைவாழ்வியல் ஊர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இது தற்சார்பு வேளாண்மை, சீர்தொழில், சால்புக்கல்வி, நன்னல மருத்துவம் முதலிய கூறுகளுடன் கூடிய ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்கும் திட்டம்.

தமிழ்த் திணைக் கோட்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து அதைக் கோட்பாடாகவும் நிறுவி வருகிறார்.

செம்மொழி நிறுவனத்துடன் இணைந்து சங்க இலக்கிய சூழல் சொற்களஞ்சியம் என்ற ஆய்வைச் செய்து அளித்துள்ளார்.

மரபீனி, குருமேனி, அலையாத்திக் காடுகள் போன்ற பல சூழலியில் துறை சார்ந்த சொற்களை உருவாக்கியுள்ளார்.

திணைநெறி வேளாண்மை என்று புதிய வேளாண்மைச் சிந்தனைப்பள்ளியை உருவாக்கி அதைப் பரப்பியும் வருகிறார்.

சமூக அனுபவங்களில் இருந்து சிந்தித்து அவற்றைப் பற்றி எழுதி, எழுதுபவை பற்றிப் பேசி, அவற்றைச் செயல்படுத்தி அந்தச் செயல்பாடுகளில் இருந்து மீண்டும் அனுபவம் பெற்று மீண்டும் சிந்தனைகளைச் சீர்படுத்தி செயல்படுவதே இவரது அணுகுமுறை.